×

பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர பழநியில் தைப்பூச தேரோட்டம்

பழநி: பழநி தைப்பூச திருவிழா தேரோட்டம் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க கோலாகலமாக நடந்தது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் தைப்பூச திருவிழா பிப். 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம், வெள்ளி தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. முத்திரை நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமரசுவாமி தோளுக்கினியாளில் சண்முக நதிக்கு எழுந்தருளல், காலை 11 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் சுவாமி தேரேற்றம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
பெரியநாயகி அம்மன் கோயில் முன்பிருந்து விநாயகர், வீரபாகு ஆகியோர் தனித்தனி தேர்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச தேர் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தைப்பூச தேரோட்டத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே பழநியில் பல லட்சம் பக்தர்கள் குவிய துவங்கினர். நகர் முழுவதும் பச்சை, காவி உடை உடுத்திய மனித தலைகளே தென்பட்டன. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்கள் ஆடிய காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடைய செய்தது. வின்ச், ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர்.
மலைக்கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் சன்னதி வீதியில் இருந்து வடக்கு கிரிவீதியில் உள்ள குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக யானைப்பாதை மூலமாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிவழிப்பாதையை பயன்படுத்தும் வகையிலும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கலெக்டர் விஜயலட்சுமி, பழநி கோயில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, செந்தில்குமார் எம்எல்ஏ, எஸ்பி சக்திவேல், கோயில் துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவநேசன், செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன் விஷ்ணு, நரேஷ்குமரன், கண்பத் ஹோட்டல்ஸ் ஹரிஹரமுத்து, செந்தில், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், மாவட்ட ஆவின் தலைவர் செல்லச்சாமி, முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு, அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், அடிவாரம் கொங்கு வேளாளர் பேரவை நிர்வாகி மாரிமுத்து, பாஜ தேசிய விவசாய தலைமை செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, புஷ்ப கைங்கர்ய சபா நிர்வாகி மருதசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : pilgrims , Devotees, Palani, Thaipuzha Chariot
× RELATED உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால்...